முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியான் விளை பகுதியில் சமையல் தொழிலாளியான ஷாம் பாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அகமது ரெஜினா என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்பாயின் அண்ணன் மகளான ஷார்ஜா பாத்திமாவை அதே பகுதியில் வசிக்கும் முனீஸ் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து முனீஸ் தனது மனைவியான ஷார்ஜா பாத்திமாவின் படிப்புச் சான்றிதழ்களை அவரின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு ஷார்ஜா பாத்திமாவின் பெற்றோர் மற்றும் ஷாம் பாய் தர மறுத்துவிட்டனர். இதனால் முனிஸூக்கும், ஷாம் பாயிக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாம் பாய் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த முனீஸ் அவரை அவதூறாக பேசி திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரின் தலையில் வெட்டி விட்டார். இதில் ஷாம்பாய் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்து விட்டார். இதனை அறிந்த ஷாம்பாயின் மனைவியான அகமது ரெஜினா முனீஸை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது முனீஸ் அவரையும் அங்கிருந்த கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஷாம்பாயிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அகமது ரெஜினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷாம்பாயை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக முனீஸை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.