நகராட்சி அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல் செய்ததாக 3 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து வாணியம்பாடி நகராட்சியில் மேலாளராக வேலை பார்த்த சுரேஷ், கணக்காளர் முரளிகாந்த், உதவியாளர் குருசீனிவாசன் போன்றோர் ஒன்று சேர்ந்து ஊழியர்களின் வைப்புநிதி, கர்ப்பிணிகளுக்கு வழங்கும் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்படும் பணம் போன்றவற்றை கையாடல் செய்த புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டனர். அதன்படி 3 பேரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது வாணியம்பாடி நகராட்சியில் மேற்கண்ட 3 நபர்களுடன் வேலை புரிந்து வந்த ஊழியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில், காவல்துறையினர் வாணியம்பாடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்திற்கு சென்று அங்கு நகராட்சி சம்பந்தமான அப்போதைய ஆவணங்களை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.