விலை உயர்ந்த மது பானங்களை குடித்து கடையில் திருட முயற்சி செய்த பேக்கரி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் பணி முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலை 2 மணி அளவில் கடைக்கு வந்த குமார் விளக்கு எரிந்த நிலையில் ஆள் இருக்கும் சத்தம் கேட்பதை கவனித்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குமார் மற்ற ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் கடை ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை தட்டிய போது மர்ம நபர் ஒருவர் மது போதையில் தள்ளாடிய படி கதவை திறந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கடைக்குள் சென்று பார்த்த போது விலை உயர்ந்த மது பாட்டில்களை இந்த மர்ம நபர் திருடி குடித்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நபர் கல்லால் அடித்து லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் வசிக்கும் பேக்கரி கேக் மாஸ்டரான ரித்தீஷ் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ரித்தீஷ் கடைக்குள் நுழைந்து விலை உயர்ந்த மது பானங்களை குடித்து விட்டு அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதிர்ஷ்டவசமாக 4 லட்ச ரூபாய் தப்பித்து விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரித்திஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.