வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது சடலமாக கிடந்த வாலிபரின் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. மேலும் வாலிபர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் கழித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வரை சாலையில் ரத்தம் சிந்தி கிடைக்கிறது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் வீராட்சி மங்களம் இப்பகுதியில் வசித்த தொழிலாளியான கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் முயல் வேட்டைக்கு சென்று விட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து கோபிநாத்தை செல்போன் மூலம் யாரோ தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கோபிநாத் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகே கோபிநாத்தை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.