Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகரித்துவரும் இணையதள குற்றங்கள்…. ஏமாந்துபோன 2 பேர்…. சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை….!!

ஆன்லைன் மூலம் 2 பேரிடம் மர்ம நபர்கள் ஏமாற்றிய 2 லட்சம் கைப்பற்றியதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த மாதம் ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்ததில் குறைந்த விலையில் மெமரி கார்டுகள் தருவதாக குறிப்பிட்டிருந்தது. அதனைக் கண்ட யோகேஷ் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபரை தொடர்பு கொண்டு தனக்கு மெமரி கார்டுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் 2 லட்சம் தர வேண்டும் என்று யோகேசிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னிடம் 2 லட்சம் இல்லை என்று யோகேஷ் கூறியதால் 1 லட்சம் தருமாறு அந்த நபர் கேட்டுள்ளார். அதனை நம்பி யோகேஷ் 1 லட்சத்தை வங்கி கணக்கின் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் கொடுத்த பின்பு அந்த நபர் மெமரிகார்டுகளை கொடுக்கவில்லை.

இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அந்த நபர் கொடுக்காததால் யோகேஷ் அதிர்ச்சிடைந்தார். இதனையடுத்து யோகேஷ் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினரின் நடவடிக்கையால் வங்கியில் செலுத்திய 1 லட்சம் பணத்தை அந்த மர்மநபர் எடுக்கமுடியாத அளவிற்கு வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின் பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்த ஜிலானி அன்சாத் என்ற வெங்காய வியாபாரிக்கு முகநூலில் மர்ம நபர் ஒருவர் அறிமுகமானார். அப்போது குறைந்த விலைக்கு வெங்காயம் தருவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார். அதை நம்பி ஜிலானி அன்சாத் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து 1 லட்சத்து 69 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் பல நாட்களாகியும் கொடுத்த பணத்திற்கு வெங்காயம் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த ஜிலானி அன்சாத் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 1 லட்சத்தை மீட்டனர். மேலும்  மீதமுள்ள தொகையை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதனால் முன்பின் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாறவேண்டாம் என்றும் தங்களது வங்கி சார்ந்த விவரங்களை பகிர வேண்டாம் என்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மர்மநபர்களால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |