வீடு புகுந்து கொள்ளையடித்த தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர்களது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் செலகரிசல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளான ஆஞ்சநேயா மற்றும் இந்திராணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் 2 பேரும் இணைந்து தான் பரமேஸ்வரியின் வீட்டில் திருடி சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது, ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்வது போன்று நடித்து வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் தம்பதிகள் இருவரும் இணைந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.