படகில் உள்ள பலகை மீது தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஜெகதாப்பட்டினம் பகுதியில் தேசிங்கு என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தேசிங்கு தனக்கு சொந்தமான விசைப்படகில் மாணிக்கம் உள்பட 4 மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது படகில் உள்ள பலகை மீது மாணிக்கம் தவறி விழுந்துள்ளார். இதனால் மாணிக்கத்திற்கு பலமாக நெஞ்சில் அடிபட்டதால் சிறிது நேரத்திலேயே அவர் மயக்கம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கத்துடன் இருந்தவர்கள் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு சங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழுமம் ஆகியோர் ஆம்புலன்சுடன் கரையில் தயாராக நின்றுள்ளனர். அதன்பின் மாணிக்கத்தை ஆம்புலன்சில் ஏற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.