கனடாவின் எல்லைகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 16 மாதங்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. இதனை அடுத்து அத்தியாவசியமான பயணங்கள் மட்டும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 16 மாதங்களுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் அமெரிக்காவுடனான சர்வதேச எல்லைகள் திறக்கவுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் அமெரிக்கா நாட்டில் தடுப்பூசி செலுத்திய குடிமக்கள் மற்றும் நிரந்தரமாக வசிப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் பிற நாட்டுடனான சர்வதேச போக்குவரத்து தடை அகற்றப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழை வழங்கவில்லையெனில் வெளிநாட்டு பயணிகள் யாரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் ஃபைசர், பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் மட்டுமே கனடாவிற்குள் நுழைய முடியும். மேலும் கனடாவிற்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் நாட்டில் நுழைவதற்கு முன்னர் 3 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் அல்லது மூலக்கூறு பரிசோதனையின் முடிவுகளை காட்ட வேண்டும். இதனை அடுத்து கனடா அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் வரும் போது அவர்களுக்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என கூறியுள்ளது.