கோமாவிற்கு சென்ற மகனுடன் பெண் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் இவர்களது மகன் ஹரி கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசு தங்களது மகனின் பராமரிப்பு செலவிற்கு நிதி வழங்க வேண்டும் எனவும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோமாவில் இருக்கும் தனது மகனுடன் மஞ்சுளா கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் பிற அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மஞ்சுளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவரின் கோரிக்கை படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் மஞ்சுளா தனது மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.