சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. காலையில் வேலைக்கு செல்பவர்களும் வியாபாரிகளும் மழையில் நனைந்த படி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் மத்திய மேற்கு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர கடல் கடந்து தெலுங்கானா வரை நீண்டு உள்ளதாக கூறிய அவர்,
இந்த சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். திருவள்ளூரில் இருந்து நாகை வரை உள்ள மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் கடலில் பலத்த காற்று வீசுவதால் நாகை காரைக்கால் கடலூர் புதுச்சேரி எண்ணூர் துறைமுகங்கள் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.