12- ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் துபாஷ் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார் .இவருடைய மகன் அஜய் 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி திடீரென்று காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதே நேரத்தில் அஜயையும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வாலிபர் அஜய் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதன்பிறகு வாலிபர் அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.