100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் சீரான வேலை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 800 பேர் அடையாள அட்டை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் 50 பேருக்கு மட்டுமே வேலை அளிப்பதாக அவர்கள் குற்றம் சாற்றியுள்ளனர். எனவே அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் சீராக வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் வந்ததால் தற்போது சுமார் 7 லட்சம் மதிப்புள்ள வேலைகள் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கி அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வாங்கி தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.