தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த மோசடியில் சங்கத்தின் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ரெங்கசமுத்திரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நகைக்கடன் பயிர்க்கடன் போன்றவை வழங்கப்படும். இந்நிலையில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகைகளை முறையாக வரவு வைக்காமல் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு துறை அதிகாரிகள் அங்கு சோதனை செய்தபோது 2013 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை உள்ள கணக்குகளில் விவசாயிகள் செலுத்திய தவணை தொகைகளை முறையாக வரவு வைக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் மொத்தமாக கணக்கில் காட்டாமல் சுமார் 16,58,000 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வரும் ஜக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன்(54) இந்த மோசடி செய்துள்ளார் என உறுதியான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவியல் குற்றபுலனாய்வு கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.