மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடி பகுதியில் வழக்கறிஞரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அனிருத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவா தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் தனது தந்தை மலைச்சாமியை பார்ப்பதற்காக அனிருத்தை அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுவன் அனிருத் அங்கிருந்த மின்மோட்டார் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்து விட்டான்.
இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.