இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பெருங்கடம்பனூர் மேலவெளி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார் .இவருக்கு தம்பி சித்ரவேல் என்ற தம்பி உள்ளார் . இதில் அண்ணன்- தம்பி இருவருக்கும் தங்களுடைய சொந்த இடத்தில் செங்கல் காளவாய் போடுவதில் ஏற்பட்ட இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தேவநதி ஆற்றங்கரை வழியில் சென்று கொண்டிருந்த அண்ணன் ரகுபதியை தம்பி சித்ரவேல் கல்லால் தாக்கி, கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து அவரை குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ரகுபதியை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்ரவேலுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.