நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் சோமசுந்தரம்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி(23) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சோமா சுந்தரத்திற்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சோமசுந்தரம் மதுபழக்கத்தை கைவிடாததால் ஆத்திரமடைந்த தமிழரசி கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சோமசுந்தரம் தமிழரசி பெற்றோர் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துள்ளார். மேலும் தமிழரசி வர மறுத்த நிலையில் மனமுடைந்த சோமசுந்தரம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையறிந்த வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோமசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.