நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்று முதல் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.