Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமாக இருக்கு…. சீரமைத்து தரனும்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலை, கோட்டார் சாலை மோசமாக காணப்படுவதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். ஆகவே குண்டும், குழியுமான சாலைகள் சரி செய்யக் கோரியும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிப்பதற்கு வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சி சார்பாக மாநகராட்சி அலுவலகம் முன்பு 20-ஆம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பா.ஜனதாவின் நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன் திரண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தேவ் தலைமையில், மேற்கு மாநகர தலைவர் சிவபிரசாத், ராகவன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து வடக்கு மாநகர தலைவர் அஜித்குமார் வரவேற்று பேசியுள்ளார். அதன்பின் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், உமாரதி ராஜன்ம், கிழக்கு மாநகர தலைவர் நாகராஜன் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உட்பட 61 பேரை காவல்துறையினர் கைது செய்து வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதற்கு முன்பாக பா.ஜனதாவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Categories

Tech |