ஜவுளி வியாபாரிடம் பணமோசடி செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டலாம்பட்டி பகுதிகளில் மல்லி சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து விற்பனை செய்து வருகின்றார். இவரின் கடையில் அழகாபுரம் பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் ஆடைகளை வாங்கி விற்பனை செய்து அதற்குரிய பணத்தை கொடுப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லி சுரேஷிடமிருந்து சங்கர்1 1/4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை வாங்கிக் கொண்டு விற்பனை செய்து பணத்தை கொடுப்பதாக கூறி சென்றுள்ளார்.
இந்நிலையில் மல்லி சுரேஷ், சங்கரிடம் ஆடைகள் விற்பனை செய்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு சங்கர் ஆடைகளை விற்பனை செய்யவில்லை என்றும் அதற்கான பணம் என்னிடம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லி சுரேஷ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மோசடி செய்த சங்கரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.