2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.