ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியில் டிரைவரான முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் அதே பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனால் தனது மகளைக் காணாமல் அவரின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினரால் அந்த மாணவியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் மாணவியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல நாட்களாகியும் தனது மகளை கண்டுபிடித்து தராததால் மனமுடைந்த அவர்கள் அங்கு சென்று திடீரென தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து தங்களின் மகளை மீட்டுத் தருவோம் என்று உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் டிரைவரான முருகேசனின் செல் நம்பரை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
அவ்வாறு காவல்துறையினர் கண்காணிக்கும் போது முருகேசன் கோவையில் ஒரு வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் கோவைக்கு விரைந்து சென்றபோது அங்கு மாணவி இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மாணவியை பத்திரமாக மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் டிரைவரான முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.