கழிவுநீர் உறைக் கிணறில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி மேலத்தெரு பகுதியில் தற்போது புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கழிவு நீர் உறை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அதில் பறக்கை மதுசூதனபுரம் பகுதியில் வசிக்கும் பிரவீன் என்பவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டு பிரவீன் விழுந்ததால் அவரின் கழுத்துவரை மணல் மூடியது. அதன்பின் பிரவீன் சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து பிரவீனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பிரவீனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிரவீனை சுற்றி மீண்டும் மண்சரிவு ஏற்படாமல் இருக்க பிளாஸ்டிக் டிரத்தை வைத்தனர். இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் பிரவீனை சுற்றியுள்ள மண் தோண்டப்பட்டு கயிறு மூலம் தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் அவரை உயிருடன் மீட்டனர். அதன்பின் பிரவீனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஆகியோர் பிரவீனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை நேரில் சென்று பாராட்டியுள்ளனர்.