அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த தெருவின் முடிவுக்கு சென்று வாகனத்தை திருப்பி வேகமாக வந்துள்ளார்.
அப்போது அந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி சங்கிலி மற்றும் நான்கு சவரன் செயினை அறுத்து கொண்டு தப்பினார். இதை சற்றும் எதிர்பாராத அவர் வீடு வாசலில் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கணவர் முருகன் தனது வாகனத்தை எடுத்து அந்த மர்ம நபரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளார். ஆனால் செயின் பறித்த மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இது தொடர்பாக அரக்கோணம் நகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்படும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.