இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடனும், பெரிதான மெனக்கெடுதல்கள் ஏதுமின்றி நல்ல வருமானம் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்திலும், பலர் வித்தியாசமான மற்றும் சர்ச்சையான விஷயங்களைச் செய்து வருகின்றனர்.
அவ்வகையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ ஒன்று காண்போரை முகம் சுளிக்கச் செய்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் டெல்லியைச் சேர்ந்த அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகியது. அந்த வீடியோவில், அந்த பெண் 10-லிருந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவனுடன் அநாகரீகமான முறையில் மிகவும் அருவருக்கத்தக்க அசைவுகளுடன் நடனமாடுகிறார்.
மேலும், அந்த பெண்ணுடன் நடனமாடிய அந்த சிறுவன் அவரின் மகன் என்றும் கூறப்படுகிறது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் அந்த பெண்ணை திட்டி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தை அறிந்த டெல்லி மகளிர் ஆணையம் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் சிறுவனின் மனநிலையே மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.