தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மினி வேனில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவிலிருந்து பூந்தமல்லிக்கு தடைசெய்யப்பட்டிருந்த குட்காவை வாகனத்தில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேனை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் அந்த வேனை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருந்த குட்காவை வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாகனத்தில் பயணம் செய்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 625 கிலோ எடை கொண்ட 48 லட்சம் மதிப்புடைய குட்கா மற்றும் மினி வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.