வாலிபர்கள் வீசிய செங்கற்கள் குழந்தைகள் மீது விழுந்ததால் கோபமடைந்த குடும்பத்தினர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கடையின் முன்பு குடிபோதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் செங்கற்களால் தாக்கியுள்ளனர். அதன் பிறகு வாலிபர்கள் வீசிய செங்கற்கள் அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறு செய்த வாலிபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தங்களின் குழந்தைகள் மீது கல் விழுந்ததால் கோபமடைந்த பெற்றோர் டாஸ்மாக் கடையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி கடைக்கு பூட்டு போட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன் பிறகு சமாதானமான இரண்டு குடும்பத்தினரும் கடையை திறந்து விட்டு அங்கிருந்து சென்றனர்.