Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் …. மீனவர்கள் திடீர் சாலை மறியல் …. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

மயிலாடுதுறை மாவட்டத்தில்உள்ள  திருமுல்லைவாசல்,கூழையார் மற்றும் தொடுவாய் ஆகிய  கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையைப்  பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வழங்க வேண்டும் என்று கடந்த 17-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதியன்று  மீனவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை ,ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  திருமுல்லைவாசல் பகுதியில் இருந்து மீனவர்கள் தங்களின் குடும்பத்தினருடன்  ஊர்வலமாக சீர்காழியில் தாலுகா அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது  சீர்காழி துணை லாமேக் , போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஆகியோர் திருமுல்லைவாசல் அருகே உள்ள காந்திநகர் இடத்தில் மீனவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் சுமார் 3  மணி நேரமாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதன்பிறகு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உட்பட ஆவணங்களை வருவாய் துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்து சென்றுள்ளனர். இவர்களின் போராட்டத்தால் சீர்காழி, திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 3 மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ கிராம தலைவரான காளிதாஸ் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்ட 700 பேர் மீது சமூக இடைவெளியை கடை பிடிக்காதது, பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்ட போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

Categories

Tech |