தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் 114 கோடி மதிப்பில் புதிய பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்: “கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, விரைவில் பணிகளை நிறைவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார்.
இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்தார். தென் மாவட்டங்களில் மிக குறைவான தொழில் வாய்ப்பு உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி செல்ல கூடிய சூழல் உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி தொழில்நுட்ப பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். தற்போது புதியதாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.