ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகள் குறி தவறி மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடி குண்டு நிரம்பிய லாரி வெடித்து சிதறியதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்கா தனது ராணுவ படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறுவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அவ்வளவுதான் தோல்வியடைந்தது முதல், தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்களது வேலையே காட்ட தொடங்கி விட்டனர். அதாவது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த தாக்குதலுக்கு இடையே வருகிற 28ம் தேதி அதிபர் தேர்தலும் நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் அந்நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க இருக்கின்றனர். இதனால் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக தலிபான் தீவிரவாத அமைப்பு தினந்தோறும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தலிபான் அமைப்பு இன்று ஜாபுல் மாகாணத்தில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தை குறிவைத்து அழிக்க டார்கெட் செய்திருந்தது. ஆனால் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு லாரி உளவுத்துறை அலுவலகம் அருகே இருந்த மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்ததால், லாரி வெடித்து சிதறி அங்கிருந்த 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் 95 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதல் பற்றி கூறியதாவது, தலிபான்கள் பயங்கரவாத அமைப்பு ராணுவ பயிற்சி தளத்தை குறிவைத்து அழிக்க திட்டமிட்டதாகவும், ஆனால் அவர்களின் குறிதவறி மருத்துவமனை அருகிலேயே குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி வெடித்துள்ளது என தெரிவித்துள்ளது.