நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன் நடந்த இரண்டு லீக் ஆட்டங்கள் மழையால் ரத்தானது. இந்நிலையில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அமித் சாத்விக் 71 ரன்களும், அந்தோணி தாஸ் 35 ரன்களும் மற்றும் ஆதித்யா கணேஷ் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
நெல்லை அணி சார்பில் ஷருண் குமார் 2 விக்கெட்டும், அதிசயராஜ் டேவிட்சன், அஜித் குமார் மற்றும் சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய நெல்லை அணி 152 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் நெல்லை அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 77 ரன்களில் சுருண்டது. இதனால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.