பரோலில் சென்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியகுளத்தில் வேலு என்ற வேல்முருகன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2012-ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின் 2017-ஆம் ஆண்டு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வேல் முருகன் பரோல் கேட்டு விண்ணப்பம் செய்ததால் 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 15-ஆம் தேதி சிறைச்சாலையிலிருந்து வேல்முருகன் பரோலில் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் சிறைச்சாலைக்கு வராமல் தலைமறைவாக இருந்ததால் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் வேல்முருகன் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் 8 ஆண்டுகளாக சிறையில் இருந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.