தேனி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளராக நடராஜன்(56) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 லிட்டர் டீசலை கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இவர் டீசலுடன் வந்ததை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது நடராஜன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரிடம் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தூய்மை பணி மேலாளராக பணியாற்றி வரும் நடராஜன் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தில் மாவட்ட தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அவர் புதிதாக பொறுப்பேற்ற ஒரு அதிகாரியை நேரில் பார்க்க சென்றுள்ளார்.
ஆனால் அந்த அதிகாரி நடராஜனை அவமதித்து பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர் ஆனால் நடராஜன் அவருடைய இருசக்கர வாகனத்தில் தான் வருவேன் என பிடிவாதம் பிடித்துள்ளார். இதற்கு பின்னர் அவருடன் ஒரு காவல்துறை அதிகாரியும் உடன் வந்துள்ளார். மேலும் போலீசார் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.