அளிஞ்சிகுளம் ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை கலெக்டர் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக, குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலமாக பரிசுத்தொகை கொடுக்கப்படுகின்றது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அளிஞ்சிகுளம் ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் ஆதிதிராவிடர் வாழும் ஊராட்சி கிராமமாக மாவட்ட கலெக்டரின் கீழ் அமைக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கினார்.
இவ்வாறு ஊராட்சியை தேர்ந்தெடுக்கும் குழுவில் மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், வருவாய் அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் போன்றோர் இடம் வகித்தனர். இந்த பரிசு தொகை 10 லட்சம் ரூபாயை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேஷ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுகுமார் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.