போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள கிரீன்சர்க்கிள், காமராஜர் சிலை சந்திப்பு, ஆற்காடு சாலை, அண்ணாசாலை மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்ற வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பித்தல், வாகன சான்று இருக்கிறதா என்றும் ஹெல்மெட் அணிந்து உள்ளாரா என்றும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, தடை செய்யப்பட்ட இடத்தில் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியது, அதிக பாரம், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தல், ஓட்டுனர் உரிமம் இல்லாதது போன்ற பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 288 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து உரிமையாளர்களிடம் மொத்தம் 36 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.