மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்திய செயல் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பி.எம்.டபிள்யூ.ஏ மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊடரங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடமாக திறக்கப்படவில்லை. மேலும் மாணவர்கள் இணையவழிக் கல்வி மூலம் பாடங்களை பயின்று வந்துள்ளனர். ஆனால் கிராமப் பகுதியில் உள்ள மாணவர்களால் இணைய சேவை சரியாக கிடைக்காததால் இணைய வழி கல்வி மூலம் பாடங்களை கற்க முடியவில்லை.
இதனால் பி.எம்.டபிள்யூ.ஏ பள்ளி ஆசிரியர்கள் திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இவர்களின் இந்த அரிய செயல் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பாடங்களை பயின்று வருகின்றனர்.