சிறுமியை. கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார் இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பெயிண்டரான கார்த்திக் என்பவர் இந்த சிறுமியை காதலித்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவர் வேலை பார்க்கும் கடையை தொடர்பு கொண்டு விசாரித்தபோது சிறுமி கடையிலிருந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கார்த்திக் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கார்த்திக்கையும், சிறுமியையும் காவல் துறையினர் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஒரு கோவிலில் வைத்து சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.