மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
மத்திய சீன நாட்டில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அங்கு ஆண்டிற்கு சராசரியாக 60 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தொடர்ந்து ஒரு மணி நேரம் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இந்த தொடர் கனமழையால் ஜென்சூ நகரம் வெள்ளத்தால் மிதக்கின்றது. மேலும் அப்பகுதியில் உள்ள மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின்துணை நதிகள் நீர்மட்ட அளவு அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது . இதில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் அங்கு 640 மி.மீ. மழை பெய்து உள்ளதாக அந்நாட்டு வானிலை மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாயமான 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .மேலும் அந்நகரின் பிரதான போக்குவரத்து சேவையான மெட்ரோ ரயில்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.