ஹைதி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்பு குறித்த செய்திகளை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்ச்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா குடியுரிமையுள்ளவர்கள் இருவர், கொலம்பியா நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களில் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் ஜோல் ஜோசப், நீதித்துறை அதிகாரி ஜோசப் பெலிக்ஸ் படியோ, அமெரிக்கா நாட்டின் உளவுதுறைக்கு தகவல்களை அளித்த ருடாபே போன்ற முக்கிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனை அடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக இருந்த கிளாட் ஜோசப் ராணுவம் மற்றும் காவல் துறையின் ஆதரவுடன் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். மேலும் அவர் பொறுப்பு வகித்த பிரதமர் பதவியை ஏரியல் ஹென்றி என்பவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதில் “ஏரியல் ஹென்றி கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ளார். மேலும் நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்து பேசவுள்ளார். ஹைதி நாட்டில் ஒற்றுமையை நிலைப்படுத்த மக்களிடம் கேட்டுக்கொண்டார்”என தெரிவித்துள்ளது.