மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மர்மநபர்கள் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நஞ்சப்பாநகர் பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் இறுதி சடங்கு செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் ஆண் பிணம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்ததும்அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கருங்கல்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எறிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பாலக்காட்டூர் பகுதியில் வசிக்கும் அசேன் சேட்டு என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் நள்ளிரவில் அசேன்சேட்டுவை மர்ம நபர்கள் தாக்கி தலையில் கல்லை போட்டு எரித்து கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அசேன்சேட்டுவை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.