சுவீடனில் ஒரு சிறைச்சாலையில் கைதிகள் இருவர் சேர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளை சிறைபிடித்த நிலையில் பீட்சா தந்தால் விடுவிப்பதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது.
சுவீடன் சிறைச்சாலையில் இருக்கும் கொலைக் குற்றவாளிகளான ஹானெட் மஹமத் அப்துல்லாஹி மற்றும் ஐசக் டியுவிட் என்ற இளைஞர்கள் எஸ்கில்ஸ்டூனா நகரத்தில் இருக்கும் சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குரிய இடத்தில் எப்படியோ நுழைந்துவிட்டனர்.
அதன்பின்பு அதிகாரிகள் இருவரை ஒரு அறைக்குள் அடைத்தனர். மேலும் அவர்கள் ரேசர் பிளேடுகள் வைத்திருந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே சிறையை சுற்றிலும் காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் என்று குவிக்கப்பட்டது.
சுமார் 9 மணி நேரங்களாக அதிகாரிகளை கைதிகள் விடுவிக்கவில்லை. எனினும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் அந்த கைதிகள் பணம் மற்றும் நகைகள் எதையும் கேட்கவில்லை. தங்களுக்கு இரண்டு பீட்சா வேண்டும் என்று கேட்டுள்ளனர். எனவே அனைத்து கைதிகளுக்கும் 20 பீட்ஸாக்கள் வழங்கப்பட்டது.
மேலும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளார்கள். ஆனால் அது கொடுக்கப்படவில்லை. பீட்சா கொடுத்தவுடன் அதிகாரிகளை அவர்கள் விடுவித்துவிட்டார்கள். அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. தற்போது அந்த கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.