ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞரிடம் இணையத்தின் மூலம் பரிசுப்பொருள் தருவதாக கூறி 21 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள பூவளந்தூரில் சந்தான பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிக்கு சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. அப்போது அவர் கேமரா குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் அமெரிக்க டெலிகிராப், டெலிபோன் நிறுவனத்தின் சார்பில் 30,000 மதிப்புள்ள கேமராவை சலுகை விலையில் தருவதாக இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கேமராவை பெறுவதற்கு முதலில் 10,000 செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய இளைஞர் பணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு இருசக்கர வாகனம், சாம்சங் செல்போன், ஐபோன், பிளே ஸ்டேஷன் ஆகியவை பம்பர் பரிசாக விழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர். அதற்கு செயல்முறை கட்டணமாக 20,000 ரூபாயை கேட்டுள்ளனர். மேலும் பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்ட பாரதி உடனடியாக அந்த பணத்தையும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல் வெளிநாட்டிலிருந்து பொருட்களை அனுப்புவதற்கு சரக்கு வரி, சான்றிதழ் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கூறி தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளனர்.
இதனை நம்பி பாரதியும் பணம் அனுப்பிக்கொண்டே இருந்துள்ளார். இவ்வாறு அவர் 21 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதனையடுத்து இளைஞர் ஒருகட்டத்திற்கு மேல் பணம் கேட்ட மர்மநபர்கள் மீது சந்தேகமடைந்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி சேதுராயர் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாரதியை தொடர்ப்பு கொண்டவர்களின் தொலைபேசி எண், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை வாங்கிக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.