தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆறுமுகமங்கலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாட சாமி ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார்.
ஏரலை சேர்ந்த தெய்வத்தடியாபிள்ளை என்பவர் நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வரும்போது, இரட்டை சுடலைமாடசுவாமி கோயில் தாண்டி வரும்போது ஒரு மூட்டை மாயமாகி விடுகிறது. இது போன்று வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. மாதம் ஒன்றாகியும் காரணம் தெரியாமல் தவித்தார் தெய்வத்தடியாபிள்ளை. அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய சுடலைமாடன், உனது வண்டியிலிருந்து நெல் மூட்டையை நான் தான் எடுத்தேன் என்றும் எனது எல்லைக்குள் தொழில் செய்யும் நீ, என்னை கவனிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
அப்போது தெய்வத்தடியாபிள்ளை நான் முருகனுக்கு அடிமைப்பட்டவன். சைவம். உனக்கு பலி கொடுத்து பூஜை செய்ய என்னால் முடியாது. உன் இருப்பிடம் தேடி வந்து நெல் கொடுக்கவும் முடியவில்லை எனக்கூறினார். உடனே சுடலைமாடன் அடுத்துவரும் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை என் கோட்டையிலிருந்து எட்டாவது விளங்காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும் பனைமரங்களுக்கு இடையே ஒற்றையாய் நிற்கும் வேப்பமரத்தின் கீழ் புற்றாய் வளர்ந்து நிப்பேன்.
அவ்விடத்தில் எனக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வா. உன்னையும் உன் சந்ததியினரையும் வளமோடு வாழ வைப்பேன். என் பேரை சொல்லி வரும் பக்தர்களுக்கு வேறுபாடு பாராமல் திருநீறு கொடுத்து அனுப்பு. அவர்களிடம் எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்கிறேன். பூஜை செய்யும் பணிவிடையை நீ செய்தால் போதும் என்றுரைத்தார்.
சுடலைமாடன் சொன்னபடியே பனங்காட்டுக்குள் வேப்பமரத்தின் அடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார். அந்த இடத்தில் கோயிலும் கட்டப்பட்டது. தெய்வத்தடியாபிள்ளை கோயிலை நிர்வகித்து பூஜை செய்து வந்தார். வேப்பமரத்தின் அடியில் தோன்றியதாலே இங்கிருக்கும் சுடலைமாடன் வேம்படி மாடன் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோயில் கீழகோயில் என்று அழைக்கப்படுகிறது. மண் பீடமாக சுவாமி இருக்கிறார். மூலவர் இருக்கும் இடம் பனை ஓலையால் வேயப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தில் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் சுடலை மாடனின் உத்தரவிற்கிணங்க கொடை விழா நடத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். அதாவது கொடை விழா நடத்தும் பொருட்டு, ஆடிமாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும் போது, பல்லி சத்தம் எழுப்பினால் அதை சுடலை ஆண்டவனின் உத்தரவாக ஏற்று கொடை நடத்த முடிவு செய்கின்றனர்.
பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால் குறிக்கப்பட்ட நாள், மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை. நாள், மாதம் மாறி கூட அந்த உத்தரவு வந்த பின்தான் கொடை நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். சுடலைமாடனே பல்லி ரூபம் கொண்டு உத்தரவு கொடுப்பதாக நம்புகின்றனர்.