தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து விதமான நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை அரசு செய்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜுகோட் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படாமல் இருந்தது. மூன்று தவணைகளில் போடப்படும் இந்தத் தடுப்பூசியால் தனியார் மருத்துவமனைகளில் தவணைக்கு ரூ.4000 வீதம் ரூ.12,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
தமிழகம் முழுவதிலும் இன்று முதல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அரசு பொது சுகாதார மருத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிமோனியா தடுப்பூசி இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு மாதம், மூன்று மாதம் மட்டும் 9 மாதங்களில் மூன்று தவணையாக இந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசியை பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.