மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் நிலைதடுமாறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் பகுதியில் மீனவரான பிரான்சிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் அப்பகுதியில் வசிக்கும் சிலருடன் இணைந்து நாட்டுப் படகின் மூலம் மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது பிரான்சிஸ் சென்ற படகு நடுக்கடலில் நின்று அப்பகுதியிலுள்ள கணவாய்க்கு செல்வதற்கு தெர்மாக்கோலால் செய்யப்பட்ட சிறிய படகினை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காற்று பலமாக வீசியதால் பிரான்சிஸ் தெர்மாகோலால் செய்யப்பட்ட படகிலிருந்து நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக கடலுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் குதித்து அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் பிரான்சிஸ் அதற்குள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி விட்டதால் அவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி காவல்துறையினர் மற்றும் முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இணைந்து ரோந்து கப்பலின் மூலம் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அதன் பிறகு முத்துக்குளிக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பிரான்சிஸை சடலமாக மீட்டு கரைக்கு சென்று உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பிரான்ஸின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.