சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நாகர்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் காவல்துறையினர் வடசேரி கனகமூலம் சந்தை வடக்கு கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கம்பம் உத்தமபாளையம் பாரதியார் நகரை சேர்ந்த செல்வி, நாகர்கோவில் புத்தேரி மேலகலுங்குடி புளியடி ரோடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ், கண்ணன்குளம் கீழ சரக்கல் விளையை சேர்ந்த காமராஜ் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதேபோன்று நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிக்காக சென்றபோது, அங்கு வல்லன் குமாரன் விளையை சேர்ந்த விஷ்ணு என்பவரை பிடித்தனர். அதன்பின் அவரிடம் இருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விஷ்ணுவை கைது செய்தனர். இவ்வாறு மாவட்டம் முழுவதிலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆகவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.