ஆற்றிற்கு குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் என்ஜினீயரான முகமது முபாரிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது முபாரிஸூக்கும் சேதுக்கு வாய்த்தானை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முகமது முபாரிஸ் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து முகமது முபாரிஸ், மனைவி மற்றும் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது முகமது முபாரிஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அலறி சத்தம் போட்டுள்ளனர்.
அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று முகமது முபாரிஸை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு முகமது முபாரிஸூக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று முகமது முபாரஸின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.