ஓட்டலில் நுழைந்து மர்ம நபர்கள் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடையை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அய்யனார் மறுநாள் காலை வந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த ரொக்கப்பணம், பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.