மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அமைப்புசாரா தொழிலாளர்களும் மாதம் பென்சன் பெறும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ், 60 ஆண்டு வயதை கடந்த நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.3000 பென்சன் தொகை வழங்கப்படும். பயனாளிகள் பென்சன் பெறும் காலத்திலேயே இறந்துவிட்டால், அவரின் மனைவி அல்லது கணவனுக்கு அந்த பென்சன் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் தனது வயதுக்கு ஏற்ப மாறுபட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். பயனாளியின் வயது 18 என்றால் மாதம் ரூ.55 மட்டும் செலுத்தினால் போதும். பயனாளியின் வயது 30க்கு மேல் இருந்தால் மாதம் ரூ.100 செலுத்த வேண்டும். பயனாளி 40 வயதைக் கடந்தவராக இருந்தால் மாதம் ரூ.200 செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு தேவைப்படும். மேலும், ஆதார் அட்டை, மொபைல் எண் ஆகிய விவரங்களை வழங்க வேண்டும்.