ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் தலீபான்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக விமானப்படை மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கான அனுமதியை அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதி கென்னத் மெக்கென்சி வழங்கியுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கன் அரசுக்கும், ஆப்கன் படைகளுக்கும் உதவுவதில் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாகவும் கிர்பி தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க படைகள் தலீபான்களுடன் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலகி வருவதால் தற்போது ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.