காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெருவில் கடந்த 2-ஆம் தேதி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் மதுபாட்டில்களை டேப் மூலமாக உடலில் ஒட்டி, நூதன முறையில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் சம்பவத்தன்று மதுபாட்டில் கடத்தியவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுவித்தது போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அளித்த பரிந்துரையின்படி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்- இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, ஏட்டுக்கள் சண்முகசுந்தரம், ராஜா மற்றும் காவல்துறையினர் பாரதிதாசன், விமலா ஆகிய 6 பேரை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடம் நீக்கம் செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் இந்த விவகாரத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தப்ப விட்ட நபர்களை பிடிப்பதற்கு திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபரஞ்சோதி போன்றோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் கோமளப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த அருண்ராஜ், கேசவன் ஆகிய 2 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்கள் கடத்திய 2 பேரையும் கைது செய்தனர்.